Kullakar Rice

குள்ளக்கார் அரிசி!

குள்ளக்கார் அரிசி அறிமுகம்

குள்ளக்கார் அரிசி பழங்கால இந்திய சிவப்பு அரிசி வகைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வளரும் அரிசி வகை. அரிசி உணவு சாப்பிடுதல் உடல் நலத்திற்கு கேடு என ஒரு பரவலான நம்பிக்கை பரவி உள்ளது. ஆனால் இவ்வரிசியானது இந்த பொய்யான தகவலை உடைக்கும் வகையில் பல நன்மைகளும் மருத்துவ குணங்களும் கொண்டுள்ளது.

பலம் வாய்ந்த குள்ளக்கார் அரிசி வகை

இது குறுகிய காலத்தில் பயிரிடக்கூடிய ஒரு நெற் பயிராகும். இவ்வரிசியை ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பட்டத்திலும் பயிரிடலாம். அதாவது மூன்று போகமும் விளையக்கூடியது. மேலும் இது இயற்கையாகவே பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலை எதிர்க்கும் தன்மை கொண்டது. எனவே பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயனங்கள் பயன்படுத்தத் தேவை இல்லை.

இது பல்வேறு நிலத் தன்மைக்கேற்ப தன்னை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. வறண்ட நிலம், நீர் அதிகம் கொண்ட நிலம் என அனைத்து இடங்களிலும் வளரக் கூடிய ஒன்றாகும். இவ்வரிசி 100 இல் இருந்து 110 நாட்களில் வளரக் கூடியது. இது 100 செ.மீ. உயரம் வரை வளரும்.

குள்ளக்கார் அரிசியின் நன்மைகள்

  • சிவப்பு அரிசி வகைகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வெகுவாக உள்ளன.
  • இது உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து உற்சாகமூட்டுகிறது.
  • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், சிறு வயதினருக்கு வரும் வயதான தோல் நோய்களைத் தடுத்தல் போன்றவற்றைச் செய்யும் தன்மை கொண்டது.
  • இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்தது.
  • நல்ல நோய் எதிர்ப்பு சக்திக்கு பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது.
  • இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
  • நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளது.
  • இவ்வரிசி ஜீரணம் ஆக நேரம் ஆகும் என்பதால் இது பசியைக் குறைத்து உடல் இடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. கெட்ட கொழுப்பை குறைக்கிறது மற்றும் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
  • உடல் மற்றும் தசை வலிமையை வழங்குகிறது.
  • இவ்வரிசி வகை தோலுக்கும் நன்மை பயக்கும். இதனை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து அந்த தண்ணீரை வடித்து முகத்தில் பூசி வர முகம் பொலிவுடன் காணப்படும்.

பயன்படுத்தும் உணவுகள்

இதனை தினசரி உணவுக்கான அரிசியாக பயன்படுத்தலாம். மேலும் இவ்வரிசி கொண்டு இட்லி, தோசை, அரிசி பாயாசம், புட்டு, கஞ்சி, சாலட், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், உப்புமா, கிச்சடி போன்ற அணைத்து உணவு வகைகளையும் தயாரிக்கலாம். மேலும், குள்ளக்கார் அரிசியின் அவுல் பயன்படுத்தி பல்வேறு வகையான உணவுகளை சமைத்து மகிழலாம்.

முடிவுரை

இவ்வரிசியின் பயன்களை அனைவரும் உணர்ந்து இதனை உண்டு அதன் தனித்துவமான பயன்களை பெற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.