வரலாற்றில் ஒரு பார்வை
மஞ்சள் அதனோட துடிப்பான நிறம், தனித்துவமான சுவை மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைக்காக பெயர் போனது. இந்த தங்க நிற மசாலாவான மஞ்சளின் நன்மைகள் பல நூற்றாண்டுகளா பாரம்பரிய மருத்துவத்துலையும், சமையல் நடைமுறைலையும் முக்கியமானதா இருக்கு.
இது தெற்காசியாவ பூர்வீகமா கொண்ட இஞ்சி குடும்பத்த சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். முதல்ல நிறத்த கூட்டுவதற்காக பயன்படுத்தப் பட்டிருந்தாலும் தமிழ்நாட்டுல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சித்த மருத்துவத்துல மஞ்சள் பயன்படுத்தப்பட்டதா வரலாறு சொல்லுது.
தமிழகத்தில ஈரோடு மாவட்டம் மஞ்சள் வேளாண்மைக்கும், சந்தைக்கும் பெயர் போனது. இதனால மஞ்சள் மாநகரம்னு பெயர் வந்துச்சு.
நல்லா காய்ந்த மஞ்சள் கிழங்கோட விரலை உடைச்சோம்னா உலோக மணம் வரும். இது இந்தியாவோட மிக பழமையான நறுமண பொருள்கள்ல ஒன்று.
மஞ்சள் செடியின் பண்புகள்
மஞ்சள் செடி 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும். இதனோட இலைகள் கொத்து கொத்தா இருக்கும். தண்டோட முளையில இருந்து கிளைத்து மண்ணுக்குள்ள செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.
இது நல்லா வளர 20 °C ல இருந்து 30 °C வரை இடைப்பட்ட வெப்பநிலை தேவைப்படுது. மேலும் கணிசமான அளவு நீர்ப்பாசனமும் தேவைப்படுது.
மஞ்சள் வகைகள் மற்றும் அதன் இயல்புகள்
- மஞ்சள்ல பல வகை இருக்கு.
- அவை முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள் மற்றும் ஆலப்புழை மஞ்சள் ஆகும்.
- இதுல ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகத்துலயே மிகச் சிறந்த மஞ்சளா கருதப்படுது.
- முட்டா மஞ்சள் கொஞ்சம் உருண்டையா இருக்கும். இத அரைச்சோ கல்லில் உரைத்தோ முகத்திற்கு பூசிப்பாங்க.
- கஸ்தூரி மஞ்சள் வில்லை வில்லையா, தட்டையா இருக்கும். இது நல்ல வாசனை நிறைந்தது.
- விரலி மஞ்சள், நீள வடிவுல இருக்கும். இதைத்தான் கறி மஞ்சள்னு சொல்லுவாங்க.
ஊட்டச்சத்துக்கள்
இதுல பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கு.
மஞ்சள்ல அதனோட நிறத்துக்கு காரணமான பிரகாசமான மஞ்சள் நிறமி, மற்றும் உயிரியக்க கலவை குர்குமின் இருக்கு. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்பு கொண்டது.
வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற வைட்டமின்களும், பொட்டாசியம், இரும்பு மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட பல்வேறு தாதுக்களும், நல்ல நார்ச்சத்தும் கொண்டிருக்கு.
மஞ்சளின் சமையல் பயன்பாடுகள்
- சமையல்ல பயன்படுத்தும்போது உணவுக்கு நல்ல நிறத்தையும், சுவையையும் குடுக்குது.
- மஞ்சள் தூள் சூப்கள், கறிகள், ரசம், பொரியல்கள், அசைவ சமையல் வகைகள் மற்றும் பலவகையான அரிசி உணவுகள் உட்பட பல்வேறு உணவுகள்ல பயன்படுத்தலாம்.
- இது உணவுப் பொருட்கள கெட்டுப்போகாம பாதுகாக்குது.
- இறைச்சி மேல தடவும்போதும், இறைச்சி சமைக்க பயன்படுத்தும் போதும் அதனோட என்சைம் கெட்டுப் போகாம நீண்டநேரம் பாதுகாக்குது.
- ஜப்பான்ல ஒகினாவா அப்படீங்குற எடத்துல மஞ்சள் தேனீர் ரொம்ப பிரபலமானது.
- காய்கறிகள வாங்கீட்டு வந்த உடனே உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீருல கழுவி பயன்படுத்தினா அதுல இருக்கிற கிருமிகள் மற்றும் மாசுக்கள நீக்கி உடலுக்கு நன்மை செய்யும்.
பிற பயன்பாடுகள்
- மஞ்சள பயன்படுத்தி உயிர் விவசாயிகள் குளியல் சோப்பு கூட தயாரிக்கறாங்க.
- மஞ்சள பயன்படுத்தி பல கிரீம் அல்லது லோஷன்கள் தயாரிக்கப்படுது. இது முகத்தில உள்ள முடிகள் மற்றும் முகப்பருக்கள குறைக்க உதவி செய்யுது.
- பச்சை அப்புறம் உலர்ந்த மஞ்சள் கிழங்குல இருந்து எண்ணெய் வடிக்கப்படுது. இந்த எண்ணெய்கு நச்ச தடை செய்யற தன்மை இருக்கு.
- மஞ்சள்தூள திரவ வடிவத்தில பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்த கண்டுபிடிக்கலாம் அப்படினு அறிவியலாளர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க.
மஞ்சளின் நன்மைகள்
- பல நோய்க்கு மருந்தாவும், நிவாரணியாவும் பயன்படுது.
- பாரம்பரியமா மூட்டு வலி மற்றும் மூட்டுவலி அறிகுறிகள போக்க மஞ்சள் பயன்படுத்தப்படுது. அதனோட அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு ஆரோக்கியத்த மேம்படுத்தவும், விறைப்புத்தன்மைய குறைக்கவும் பங்களிக்குது.
- மஞ்சளுக்கு பாக்டீரியாவ எதிர்க்கிற பண்புகள் இருக்கு. அதனால இது தோல் மேல எந்த பாக்டீரியா தொற்றும் ஏற்படாம பாத்துக்குது.
- எண்டோடெலியல் செயல்பாட்ட மேம்படுத்துறது மூலமாவும், வீக்கத்த குறைகிறது மூலமாவும், கொலஸ்ட்ரால் அளவ நிர்வகிப்பதன் மூலமாவும் மஞ்சள் இதய ஆரோக்கியத்த மேம்படுத்துது அப்படினு ஆய்வுகள் சொல்லுது.
- குர்குமின் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்ட பாதைல இருக்க தடைய கடந்து செல்ல கூடிய தன்மை கொண்டது.
- மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு நோயான அல்சைமர் உள்ளவங்களோட மூளையில ஏற்படற கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கிறது அப்படினு சில ஆராய்ச்சிகள் சொல்லுது.
- புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படற கீமோதெரபி சிகிச்சை காரணமா ஏற்படுற புதிய புற்றுநோய்கள தடுக்க மஞ்சள் உதவி செய்யுது.
- வாழ்க்கையில ஏற்படும் வயது தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த மருந்து.
- இது நோயெதிர்ப்பு மண்டலத்த ஆதரிக்குது.
- கூடுதலா, அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்ற குணப்படுத்துது.
- செரிமான பிரச்சனைகளுக்கும் பாரம்பரிய தீர்வா கருதப்படுது.
- குர்குமின் மூளை செல்கள் மீண்டும் உருவாக உதவி செய்யுது.
- பெருங்குடல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படலாம்.
- இது மூல நோய் அப்புறம் பிற இரைப்பை குடல் நிலைகளால ஏற்படுற வீக்கத்துக்கு சிகிச்சையளிக்க கூட உதவும்.
- வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் போக்குது.
தமிழர் வாழ்வியலில் மஞ்சள்
- தமிழர்களான நாம மஞ்சள மருத்துவ பொருளா, கிருமிநாசினியா, எந்த தீட்டையும் தூய்மை படுத்தக்கூடிய ஒரு தூய பொருளா கருதுகிறோம்.
- புதிதா ஒரு வீட்டில குடிபோறவங்க உப்பு, மஞ்சள் போன்றவற்ற கடவுள் படத்தின் முன் வெச்சுட்டு அதுக்கு அப்புறமா தான் பால் காய்ச்சுவாங்க.
- புது துணி போட்டுகரதுக்கு முன்னாடி மஞ்சள நீரில் தேய்த்து அதை ஆடையில வெச்சுட்டு தான் போடுவோம்.
- கோயிலுக்கு தீர்த்தம் எடுக்கறதுக்கு முன்னாடி, முதலில் மஞ்சள் கலந்த நீர் எல்லார் மேலயும் ஊற்றப்படுது.
- பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவாங்க.
- எல்லா பூஜைகள்ளையும் மஞ்சள் வில்லைகள சாமி முன்னாடி வெச்சு தான் பூஜை பண்ணுவோம்.
- மஞ்சள் தூளை நீருல கலந்து பிள்ளையார் பிடித்து அறுகம்புல் வைத்து பிள்ளையாராக வழிபடுவோம்.
- திருவிழாக் காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரை தெளித்து விளையாட கூட செய்வோம்.
- எல்லா விதமான தமிழர்களோட விசேஷங்கள்ளையும் மஞ்சள் தண்ணி ஊத்தற சடங்கு முக்கியமா இடம் பெற்று இருக்கும்.
முடிவுரை
எக்கச்சக்கமான மஞ்சளின் நன்மைகள் பற்றி இந்த வலைப்பதிவுல பார்த்தோம். உங்களுக்கு இயற்கை முறைல விளைவிக்கப்பட்ட தரமான மஞ்சள் மற்றும் அது சம்பந்தப்பட்ட எந்த பொருட்கள் வேணும்னாலும் Uyir Organic Farmers Market ல வாங்கிக்கலாம். இதனோட நன்மைகள உணர்ந்து தினசரி வாழ்க்கைல பயன்படுத்தி ஆரோகியமா வாழலாம்.