சுரைக்காய் என்று கூறக் கேட்டாலே எத்தனை நினைவுகள். சுவையான, சத்தான காய் மட்டுமல்ல தண்ணீர் நிரப்பி குளிர்ச்சியான நீரைப் பருக ஏற்ற இயற்கையான ஜாடி. மேலும், முதுகில் கட்டி நீச்சலடிக்க பயன்படுத்தப்படும் காற்றடைத்த குடுவை. கிராமப் புறங்களில் தென்னை பனை மரங்களில் பதநீர் இறக்குவதற்கு குடுவையாக காய்ந்த சுரைக்காயைப் பயன்படுத்துவார்கள். பலர் இதனை பாத்திரங்களாகவும் வடிவமைத்து பயன் படுத்தக் கண்டுள்ளோம். இது போக மிகுந்த மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. எனவே, இவ்வலை பதிவில் நன்மை தரும் சுரைக்காய் பற்றிய பல்வேறு சிறப்பு அம்சங்களை விரிவாகக் காணலாம்.
சுரைக்காய் வகைகள்
சுரைக்காயில் பல வகைகள் உண்டு. அவற்றில் சில பானை சுரைக்காய், பரங்கி சுரைக்காய், நீச்சல் சுரைக்காய், வாத்து சுரைக்காய், கதா சுரைக்காய், அகத்தியர் கமன்டலம் சுரைக்காய், நாமக்கல் கரும் பச்சை சுரைக்காய், ஆட்டுக்கல் சுரைக்காய் மற்றும் தோண்டி சுரைக்காயாகும்.
சுரைக்காய் மருத்துவ பயன்கள்
- இது சூட்டைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
- வெயில் காலங்களில் உடலில் உள்ள நீர் சத்து வேகமாக வெளியேறி விடும். சுரைக்காயை சாப்பிடும் போது உடலுக்கு தேவையான நீரை எளிதாக உடல் எடுத்துக்கொள்ளும்.
- மேலும், இது வைட்டமின் பி,சி போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளது.
- சுரைக்காயின் சதை பகுதியினை ரசமாக்கி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வந்தால் அது சிறுநீரக கோளாறு, சிறுநீர் எரிச்சல், நீர் கட்டு போன்ற உடல் உபாதைகளை குணப்படுத்தும்.
- கோளின் என்ற வேதி பொருளை தன்னுள் கொண்டுள்ளதால் மனச்சோர்வு, பதட்டம் போன்றவற்றை சுரைக்காய் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
உடல் எடை குறைய சுரைக்காய்
சுரைக்காயை தோல் சீவி நடுவில் உள்ள விதைப் பகுதியை நீக்கி விட்டு நன்கு சாறாக அரைத்துக் கொள்ளவேண்டும். இத்துடன் துளசி மற்றும் புதினா இலையை சேர்த்துக் கொள்ளலாம். இதனை தினமும் குடித்து வர உடல் பருமன் குறையத் தொடங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், இரத்தத்தை எடுத்துச் செல்லும் இதய குழாய்களில் அடைப்பு போன்றவற்றை சரி செய்வதற்கும் இது பலன் தரும்.
தாய்ப்பால் சுரக்க
சுரைக்காய், வெள்ளரி, முள்ளங்கி போன்ற நீர் சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உண்ணும் போது தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகமாகிறது.
சுரைக்காய் சமையல் வகைகள்
சுரைக்காயை கொண்டு பொரியல், மோர் குழம்பு, பச்சடி, கூட்டு, அடை தோசை, சுரைக்காய் பர்ஃபி, சாம்பார், அல்வா, பகோடா, சுரைக்காய் தோல் சட்னி, சாதம், சட்னி, ஜூஸ், அவியல், பாயாசம் போன்று பல்வேறு வகையான உணவுகளை சமைத்து சுவைத்து உண்டு மகிழலாம்.
சுரைக்காய் விதையின் பயன்கள்
சுரை விதைகளை வறுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமாகும். சிறுநீரை அதிகப்படுத்துதல், பித்தத்தைக் குறைத்து உடலுக்கு சக்தியை அளித்தல் போன்ற பல பயன்களை தரக்கூடியது.
முடிவுரை
நமது உடல் முழுவதும் இத்தனை நன்மைகளை கொண்டுசேர்க்கும் சுரைக்காயை அனைவரும் உணவில் சேர்த்து ஆரோகியமான வாழ்க்கையை வாழலாம்.